அம்பர், அம்பாசுரன் ஆகிய அரக்கர்களை காளி கொன்ற பிறகு இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்த தலம். அம்பராசுரர்களை அழித்து காளி வந்து வழிபட்டதால் இத்தலம் 'அம்பர் மாகாளம்' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'மாகாளேஸ்வரர்' என்றும் 'காளகண்டேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகின்றார். சிறிய லிங்க வடிவில் சதுர வடிவ ஆவுடையுடன் சற்று சாய்ந்த நிலையில் காட்சியளிக்கின்றார். அம்பாள் 'பக்ஷயாம்பிகை' என்றும் 'இராஜ மாதங்கி' என்றும் வணங்கப்படுகின்றாள். அம்மன் சன்னதி தனியாக பெரிய கோயிலாக உள்ளது.
மண்டபத்தில் காட்சி கொடுத்த நாதர், சோமாசிமாற நாயனார், அவர் மனைவி சுசீலா, சுந்தரர், பரவையார், தியாகராஜர் ஆகிய உற்சவ மூர்த்தி சன்னதிகள் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் காளி தேவிக்கு தனி சன்னதி உள்ளது.
வாசுகி நாகம், மஹாகாள முனிவர், கோச்செங்கட்சோழன் ஆகியோர் வழிபட்ட தலம்.
வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று சோமாசிமாற நாயனார் யாகம் செய்த நிகழ்வு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அன்று மதியம் சுவாமி புலையர் வடிவத்திலும், அம்பாள் கள் பானையுடனும், சோமாசிமாற நாயனார், சுந்தரர், ஆகியோருடன் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது. அம்பர் பெருந்திருக்கோயிலுக்கும், அம்பர் மாகாளத்திற்கும் இடையில் உள்ள அச்சந்தீர்த்த விநாயகர் கோயிலில் சோமாசிமாற நாயனார் யாகம் செய்த இடம் உள்ளது. அங்கு சென்று யாகம் நடைபெறுகிறது.
திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|